வத்திராயிருப்பு தாலுகாவில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. மழைக்காக அம்மனை வேண்டி நடத்தப்படும் இந்த திருவிழா இப்பகுதி முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரு வார காலம் கலை விழாவும் அதன் முடிவில் தேரோட்டமும் மிகச் சிறப்பாக நடைபெறும். பல்வேறு பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட இந்த திருவிழாவின் கலை விழாவானது நேற்று முன்தினம் இரவு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

தூத்துக்குடி திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முத்தாலம்மன் பக்த சபா செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார்.

செங்கோல் ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி பேசுகையில் “நாட்டில் எத்தனையோ மதங்கள் உள்ளன ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான கோட்பாடுகள் உள்ளன. அதேபோல் இந்து சமயத்திற்கு என்று ஒரு கோட்பாடு உள்ளது. எல்லா மதங்களின் கோட்பாடுகளையும் உள்ளடக்கி நிற்பது தான் இந்து மதத்தின் கோட்பாடு ஆகும். அதுவே இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பாகும். ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு விதமான கோட்பாடுகள் இருந்தாலும் அனைத்து மதங்களுக்கும் ஒரே தத்துவம் தான் உள்ளது அது அன்பு மட்டுமே. அன்பைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. எனவே மத பாகுபாடு இன்றி மனிதர்களை மதிக்கவும் அன்பு செலுத்தவும் மட்டுமே இந்த மதங்கள் வலியுறுத்துகின்றன எல்லா சமுதாயத்திற்கும் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும் ஒரு மதத்தவரின் விஷயங்களில் அடுத்த மதத்தவர் தலையீடு கூடாது. இங்கே நடக்கும் இந்த விழாவில் இந்த ஊரில் எத்தனை ஜாதிகள் இருக்கிறதோ அத்தனை ஜாதிகளும் பங்கெடுத்துள்ளன தமிழகத்திற்கே முன்னுதாரணமாக இந்த விழா நடக்கிறது”. என்றார்.

விருதுநகர் பள்ளிவாசல் இமாம் முஹம்மது கரீம் பேசியதாவது: இந்த விழாவினுடைய நோக்கமே மழை பெய்து ஊர் செழிக்க வேண்டும் என்பதுதான். வேறொரு மதத்தைச் சேர்ந்த எனக்கும் அதே நோக்கம் தான் இதில் ஜாதி மதம் பாகுபாடு யாரும் பார்ப்பதில்லை. குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் எனக்கு மற்ற இதிகாசங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை. ஆனால் நான் இங்கு வந்து மகாபாரதத்தை பற்றி ஒரு விழா பேச வைக்கிறதென்றால் அதுதான் மத நல்லிணக்கம் ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமே அதுதான். அந்த அடையாளத்தை இந்த விழா தாங்கி நிற்கிறது” என்றார்.

ராஜபாளையம் மேலப்பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது ரபிக் மிஸ்பாகி பேசியதாவது “நீ எதை விரும்புகிறாயோ அதையே பிறருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிறது இஸ்லாம். கிறிஸ்தவமும் இந்து மதமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. எல்லோரும் ஒரு தாய் மக்களே. குரான் இதைத்தான் வலியுறுத்துகிறது. மனிதத்தை வளர்க்க சொல்லுகிறது. சகோதரத்துவமும் சமய நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையை வத்திராயிருப்பில் தான் நான் முழுமையாக காண்கிறேன். இந்த ஒற்றுமை நாடு முழுவதும் பரவ வேண்டும்” என்றார்.

விருதுநகர் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை நித்தின் பிரபு பேசியதாவது ” சமய நல்லிணக்கத்தை கற்றுக் கொடுக்க கற்றுக் கொடுப்பதில் தமிழகத்தை மிஞ்ச முடியாது சமயம் நம்மை சமைக்கிறது அன்பு எங்கே இருக்கிறதோ சிவம் அங்கே இருக்கிறது என்ன இந்து மதம் சொல்கிறது கிறிஸ்தவமும் இஸ்லாமும் இதைத்தான் வலியுறுத்துகிறது தற்போதுள்ள கால சூழலில் இவ்விழாவை நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம். வாடிகன் தேவாலயம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மக்களுக்கு கூறிய விஷயங்களில் பல் சமய உரையாடல் என்பதை மிகவும் வலியுறுத்துகிறது. அனைத்து சமய மக்களோடும் நல்ல உறவோடு இருக்க அறிவுறுத்தியது. கிறிஸ்தவம் இதை கையில் எடுப்பதற்கு முன்பே வத்திராயிருப்பு 71 வருடத்திற்கு முன்பே இந்த விஷயத்தை கையில் எடுத்து துவக்கி விட்டது. 72வது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறது. இவ்விழா பல காலத்திற்கு தொடர வேண்டும்” என்றார்.

வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி விருதுநகர் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் தாமோதரன் பட பல வாழ்த்தி பேசினார். பக்த சபா தலைவர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

செய்திகள் தேவதர்ஷினி எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed