திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மிட்சுபிஷி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, புறநோயாளிகளுக்கான சிகிச்சை அறை மற்றும் மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கவரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காத்திருப்பு மற்றும் சிகிச்சைக்கான இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மிட்சுபிஷி நிறுவனம் தனது சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடத்தை கட்டியது.
இந்த புதிய கட்டிடத்தில் நோயாளிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, புறநோயாளிகளுக்கான சிகிச்சை அறை மற்றும் மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா லட்சுமி வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் அவினாஷ், தவெக மாவட்ட பொருளாளர் ஜி.கிருபாகரன், ஒன்றிய செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயகுமார், புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து, கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா லட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ. எஸ். விஜயகுமார் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பிரியா ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா லட்சுமி முன்னிலையில் கவரப்பேட்டை, ஈகுவார்பாளையம் மற்றும் கண்ணன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ சேவைகளின் செயல்பாடுகள், மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும், அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா லட்சுமியிடம் கேட்டறிந்தார்.
புதிய குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், கவரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரத்தில் கூடுதல் வசதியும், மேம்பட்ட மருத்துவச் சேவையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் : ஜான் பிரான்சிஸ் /எதிரொலி . இன் / 8939476777
