​காஞ்சிபுரம் அருகே வேலூர் நெடுஞ்சாலையில், விநாயகபுரம் பகுதியில் இயங்கி வரும் ‘நயாரா’ பெட்ரோல் பங்க்கின் பின்புறம், துருப்பிடித்த குழாயில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளது.

​இதைக் கவனிக்காத பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர், அப்பகுதியில் புகைப்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அந்த ஊழியர், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், வாகன ஓட்டிகளிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் சற்று நேரம் மிகுந்த பரபரப்பும் அச்சமும் நிலவியது.

​சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்கு முன்பாகவே, சக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு தீயை உடனடியாக அணைத்தனர். ஊழியர்களின் இந்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

​அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில், பெட்ரோல் பங்க் நிர்வாகம் பராமரிப்பின்றி துருப்பிடித்த குழாய்களைப் பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்றும், இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed