ஓட்டேரி ரவுடியைக் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த ‘A+’ பிரிவு ரவுடி, தன்னை பிடிக்க வந்த போலீசாரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாக மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ‘A+’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கருப்பு (என்ற) தமிழழகு (27) என்பவன் வசித்து வருகிறான். இவன் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா கடத்தல் உட்பட 19-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், குன்றத்தூர் அடுத்துள்ள காவனூர் பகுதியில் உள்ள ஒரு காலி மைதானத்தில், தமிழழகு தனது நண்பரான சூர்யா என்பவருடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகத் திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவுடிகளை வளைத்துப் பிடித்தனர். அப்போது போலீசாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த ரவுடி தமிழழகு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் விஜயகுமாரின் வலது கையில் பயங்கரமாக வெட்டினான். இதில் விஜயகுமார் பலத்த காயமடைந்தார் .


சூழலின் தீவிரத்தை உணர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தற்காப்பிற்காகவும் குற்றவாளி தப்பிச் செல்வதைத் தடுக்கவும், உடனடியாக தனது துப்பாக்கியை எடுத்து ரவுடி தமிழழகின் வலது காலில் சுட்டார். தோட்டா பாய்ந்ததில் ரவுடி தமிழழகு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தான்.இதையடுத்து போலீசார் அவனைக் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனது கூட்டாளி சூர்யாவையும் போலீசார் விரட்டிப் பிடித்தனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஓட்டேரியைச் சேர்ந்த ‘சிலம்பு’ என்ற ரவுடியைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டி, அதற்காக இவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி தமிழழகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். கத்தியால் வெட்டப்பட்ட தலைமை காவலர் விஜயகுமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
