காஞ்சிபுரம் அருகே ஜெ.ஜெ. நகரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், சுமார் 40 மாணவ – மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஒரு ஷேர் ஆட்டோவில் 16 முதல் 18 மாணவர்கள் வரை ஏற்றப்பட்டு அனைத்து சென்று இருக்கிறார்கள். அதில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக மாணவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அழைத்து செல்லப்பட்டு, நோட்டுப் புத்தகம், பென்சில் மற்றும் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களின் “கல்வி நேரம்” வீணாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி வாகனங்களில் வந்து இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதன் காரணமாக, சம்பவம் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

“மாணவர்களின் கல்வி நேரம் அரசியல் நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படலாமா?” என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விரும்பியிருந்தால், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மூலம் இடைவேளை நேரத்தில் வழங்கியிருக்கலாம் என்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பெற்றோரின் அனுமதி இல்லாமல் மாணவர்களை பள்ளி வளாகத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதால் சம்பந்தப்பட்ட அரசியல் நிர்வாகிகள் மட்டுமின்றி, இதற்கு அனுமதி வழங்கிய பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி என்பது கல்விக்கான ஆலயம். வகுப்பறை என்பது மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் இடம். அந்த நேரத்தை பறிக்கும் எந்த செயலாக இருந்தாலும், அது கல்வி உரிமைக்கு எதிரானதாகவே பார்க்கப்படும் என்பதே பெற்றோர்களின் ஆவேசமான கேள்வியாக உள்ளது.
