கனடா நாட்டு தமிழ் எழுத்தாளரான கவிஞர் புகாரி அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 274- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக் கூட்டம், பென்னிங்டன் நூலகக் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், பென்னிங்டன் கமிட்டியின் உப தலைவர் ஸ்ரீவாரி முத்து பட்டர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் கோதையூர் மணியன் வரவேற்றார். நூலகர் கந்தசாமி இறை வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்.

சிலம்புக் காப்பியத்தின் இலக்கிய நயம் குறித்து, திரைக்கவிஞர் சுரா சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து கவிஞர் புகாரியின் படைப்புகளை விமர்சித்து, முனைவர் சிவநேசன், வழக்கறிஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ், சிவனணைந்த பெருமாள், ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். “குருவும் சீடனும்” என்ற தலைப்பில், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டையாரையும் ஒப்பிட்டு, தமிழ்ச் செம்மல் சிவகாசி கா. காளியப்பன் உரையாற்றினார். கனடா வாழ் தமிழரான கவிஞர் “அன்புடன் புகாரி” ஏற்புரை வழங்கினார். அவருக்குத் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக “கவிச் செம்மல்” பட்டமும், செந்தமிழ் அறக்கட்டளையின் சார்பில் “செந்தமிழ் வேந்தர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டன.

கனடா நாட்டில் கல்லூரி கல்வி கற்றல் மற்றும் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகள் குறித்து, வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கவிஞர் புகாரி பதில் அளித்தார். நிகழ்ச்சியை கவிஞர் க. ஸ்ரீசக்தி சிறப்புறத் தொகுத்து வழங்கினார். மதிய உணவுக்கான ஏற்பாடுகளை சோதிடர் கோதையூர் மணியன் செய்திருந்தார். இறுதியில், துணைச் செயலாளர் ஜி. அங்குராஜ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்திகள் : சுந்தரராஜன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed