தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் !
திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளருக்கு சொந்தமான தனியார் பள்ளி வாகனத்தில் நேற்று இரவு தேமுதிக பெண் நிர்வாகிகள் திருத்தணி சித்தூர் சாலையில் பிரச்சாரம் செய்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்தனர்.

பள்ளி வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததை மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் வினோத்குமார் வீடியோ எடுத்தார். இதுகுறித்து செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது. திருத்தணி தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மையான தெரிந்ததை அடுத்து உதவி காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தூண்டுதலின் பேரில் மத்தூர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளரின் உறவினரான சதீஷ் மற்றும் நான்கு பேர் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து, திருத்தணி வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்டிஓ) அலுவலகம் செல்லும் பகுதியில் நின்று கொண்டிருந்த, நிருபர் வினோத்குமாரை ” எப்படி எங்களை பற்றி செய்தி பதிவிடுவாய், உன்னை காலி செய்து விடுவோம்” என கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர்.

இதில் கையில் காயமடைந்த நிருபர் வினோத் குமார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, இரவு 9 மணி அளவில், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் வினோத்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விதிமுறை குறித்து செய்தி வெளியிட்ட நிருபரை பட்டப் பகலில் தேமுதிக வேட்பாளர் தூண்டுதலின் பேரில் குண்டர்கள் கத்தியை காட்டி மிரட்டி தாக்கிய சம்பவம் திருத்தணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் இந்த சம்பவத்தை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திருத்தணி, திமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது தனியார் பள்ளி வாகனத்தை தேர்தல் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்திற்கு இரவு நேரத்தில் பயன்படுத்தியதை செய்தி சேகரித்து செய்தி வெளியிட்ட, மாலை முரசு தொலைக்காட்சி செய்தியாளர் தோழர் வினோத்குமார், இவரை பட்டப்பகலில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி கத்தியை காட்டி மிரட்டி சென்று உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய செயலுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்,
பத்திரிகையாளரை தாக்கிய குண்டர்கள் மீது உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தொண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிரொலி / 8939476777
