மதுரை,
சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்கள் 30 நாட்களுக்கு மேலாக களத்தில் குவிந்து கிடக்கும் அவலம் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மழையில் நனைந்து அழுகும் நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் முதல் போக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் நிலையங்களில் ஆங்காங்கே கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அறுவடை செய்து 30 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் கொள்முதல் செய்யாததால் பல ஆயிரம் மூட்டைகள் நெல் குவியல்களாக கிராம மந்தைகளிலும் தெருக்களிலும் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். கொள்முதல் செய்ய வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை தொடர்பு கொண்டும் பல்வேறு காரணங்களை கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சோழவந்தான் அருகே நெடுங்குளம் ராயபுரம் சி.புதூர் அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் அறுவடை செய்த நெல்கள் மலை போல் குவித்து வைத்துள்ளனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்து குடோன்களுக்கு கொண்டு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஆளுங்கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதில் பிரச்சனை ஏற்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளும் யாருக்கு சாதகமாக செயல்படுவது என்று தெரியாமல் பல இடங்களில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறுகின்றனர். ஒரு சில தினங்களில் கொள்முதல் செய்யாவிட்டால்,
மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் செய்யப் போவதாகவும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக சோழவந்தான் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் நனைந்து இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால், நெல் கொள்முதல் செய்வதை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சோழவந்தான் பகுதியில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தேங்கி கிடக்கும் நெல் குவியல்களை உடனடியாக குடோன்களுக்கு எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777
