தமிழ்நாடு அரசு தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர.சுபாஷ் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது ஒரு சாதாரண அரசியல் நியமனம் அல்ல; தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசிடம் வலியுறுத்தும் ஒரு மிக முக்கியமான பொறுப்பு. மத்திய அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், மாநிலத்தின் கோரிக்கைகள் மற்றும் உயர்மட்ட ஒருங்கிணைப்புகளை திறம்பட முன்னெடுக்கும் வகையில் இந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா அவர்கள் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த நியமனத்திற்கு என்ன தகுதிகள், என்ன அனுபவங்கள், எந்த அடிப்படையில் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பதைக் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி என்பது திரைப்படத் துறைக்கான பாராட்டு பதவி அல்ல; தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மத்திய அரசுடன் திறம்பட பேசி, மாநில நலன்களைப் பாதுகாக்கும் மிக முக்கியமான பொறுப்பு.
அத்தகைய பதவிக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இந்த நியமனம் எந்தத் தகுதி, அனுபவம் மற்றும் பொது நல அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

முதல்வர் இந்த நியமனத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, அரசியல் அல்லது தனிப்பட்ட நெருக்கத்தை விட, நிர்வாக அனுபவம், மாநில நலன்களை முன்னெடுக்கும் திறன் மற்றும் பொதுநம்பிக்கைக்கு உரிய ஒருவரை நியமிப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு ஏற்றதாக இருக்குமென, தனது அறிக்கையின் வாயிலாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777
