திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை வாயிலாக, பல சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பனைமரம் சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பனைவிதை வங்கி என்ற அமைப்பை உருவாக்கி, அது திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து, கடந்த நான்கு வருடங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பனைமரங்கள் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் இருந்து பனைவிதைகளை சேகரித்து, பனை மரங்கள் இல்லாத ஊராட்சிகளுக்கு அந்த விதைகளை வழங்கி ,நடவு செய்யும் பணிகளை செய்து வருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்ட அளவில் இருக்க கூடிய பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வழங்க திட்டமிட்டு அந்த பணியையும், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து, அந்த துறையின் வாயிலாக, செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் தற்போது பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சமூக நலத்துறை வாயிலாக ஏற்கனவே, கிராமப்புற பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் எம்பிராய்டிங் , மெழுகுவர்த்தி செய்தல், மற்றும் தோல் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் உட்பட பல கைத்தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல்,
இந்த பனை ஓலை பயிற்சியையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களை மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பயிற்சி வழங்கினால் அதன் மூலம், கிராமப்புற பெண்கள் சுயமாக கைத்தொழில் செய்து தற்சார்பு பொருளாதார வசதி வாய்ப்புகள் பெறுவதற்கு வழிவகுக்கும் எனவும், மிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும், இந்த பனை ஓலை பொருட்களை பயன்படுத்தலாம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் இதில், இருக்கக்கூடிய நீரை, குறைகளை அனைத்தையும் தெளிவாக கேட்டு கொண்டார்.

பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாக பெண்களுக்கு வழங்கக்கூடிய தொழில் பயிற்சிகளுடன், பனை ஓலை பயிற்சிகளையும் வழங்குவதற்கு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777
