கரண்ட் போனதுல இருந்து தூங்காமஇருக்கோம் சார் இந்த கொசுக்கடியிலும், புழுக்கத்திலும் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள். பாம்பு தொல்லை அதிகமா இருக்கு குழந்தைளுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம போனா நாங்க என்ன செய்றது மற்ற இடங்களுக்கு எல்லாம் உடனே மின்சாரத்தை சரி செய்யும் அதிகாரிகள், எங்கள் பகுதியை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? மின்சாரத்தை சரி செய்ய வரும்போது பணம் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில் வசதி இருக்கும், மற்றொரு குடும்பத்தில் இருக்காது, அப்படி இருக்கும்போது எங்களால் எப்படி பணம் கொடுக்க முடியும் ?

எருமையூர் கன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக நீடித்து வரும் கடுமையான மின் தடையால் பொதுமக்கள் பெரும் அவதி, இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டு காரணமாக ஆவேசத்துடன் பேசிய பெண்கள்…
வாரந்தோறும் இது போன்ற மின் தடை தொடர்ந்து ஏற்படுவதாகவும், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்களது வேதனையை பகிர்ந்து கொண்டனர்.

வேலைக்குச் சென்றுவிட்டு வந்து எங்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை, தண்ணீரும் இல்லை. அவசரத்திற்கு யாரிடமாவது போனில் பேச வேண்டும் என்றால் கூட போனில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போடுவதற்கு கூட எங்கு போவது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
மின் வாரியத்திற்கு (EB) போன் செய்தால் அவர்கள் போனை எடுப்பதே இல்லை. ஒருமுறை போனை எடுத்தாலும், ‘சரி செய்து விடுகிறோம்’ என்று கூறுகிறார்களே தவிர, இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை,” என்று ஒரு பெண்மணி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும் மற்றொரு பெண் கூறுகையில், குழந்தைகள் நள்ளிரவு 3 மணிக்கு மின்சாரம் போனதில் இருந்து தூங்காமல் தவித்து வருகிறார்கள். கொசுக்கடியிலும், புழுக்கத்திலும் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள் அவர்களுக்கு ஏதாவது உடலநலம் பாதிக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது? மற்ற இடங்களுக்கு எல்லாம் உடனே மின்சாரத்தை சரி செய்யும் அதிகாரிகள், எங்கள் பகுதியை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? மின்சாரத்தை சரி செய்ய வரும்போது பணம் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில் வசதி இருக்கும், மற்றொரு குடும்பத்தில் இருக்காது, அப்படி இருக்கும்போது எங்களால் எப்படி பணம் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இப்பகுதி மலைப்பகுதியை ஒட்டி இருப்பதால், இருட்டில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் வரும் அபாயம் இருப்பதாகவும், குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கவே பயமாக இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மின் தடை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் விடுப்பு எடுத்துள்ளதாகவும் கூறினர்.

இப்பகுதியில் சுமார் 20 முதல் 30 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தங்களின் இந்த அடிப்படைப் பிரச்சனைக்கு மின் வாரியமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்சாரத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; லக்ஷ்மி காந்தன் எதிரொலி / 8939476777
