நகைக்கடை ஊழியர் கொடுத்த முதல் துப்பு… துணிகளை எரிப்பதைப் பார்த்த மாடு மேய்ப்பவர்… செல்போன் கொடுத்த வழிப்போக்கர்… நிஷாந்தை அடையாளம் கண்ட பேருந்து நடத்துநர்! என ரூ.15 கோடி கொள்ளை வழக்கில் சாதாரண பொது மக்களே காவலர்களுக்கு துப்பு கொடுத்த ஹீரோக்களாக திகழ்கின்றனர்.
சினிமா பாணியில் திட்டமிடப்பட்ட கொள்ளை… முகத்தை மறைக்க முகமூடி, கைகளில் கையுறை… கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் இருக்கத் துல்லியமான முன்னேற்பாடுகள்… கொள்ளையடித்த நகைகளைப் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்துவிட்டு, பயன்படுத்திய தடயங்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்த முயற்சி… எனப் பல்வேறு வழிகளில் காவல்துறையினருக்குப் போக்கு காட்டி வந்த இளைஞரை, இறுதியில் சாமானிய மனிதர்களின் விழிப்புணர்வே குற்றவாளியை பிடிக்க உதவியது.

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நகைக்கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்க நகைகள், ஒரு கிலோ வைர நகைகள் என மொத்தம் 11.384 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி.
கொள்ளையில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையினர் ஒன்பது தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் உரையாடல்கள், வாகனங்களின் நடமாட்டம் எனப் பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்து விசாரணை நடைபெற்றது.
ஆனால், இந்த வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தியதில் நான்கு சாமானிய மனிதர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்தது, கொள்ளையன் யார் என்பதை அடையாளம் காட்டியது முதல், அவன் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்பது, இறுதியில் அவனைக் கைது செய்வது வரை இந்த நான்கு பேரின் தகவல்களும் விசாரணைக்கு வலுசேர்த்தன.


ஒரே தொப்பி… கையில் டாட்டூ! கொள்ளையனை அடையாளம் காட்டிய நகைக்கடை ஊழியர்!
கொள்ளை வழக்கின் முதல் முக்கியமான துப்பு நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரிடமிருந்துதான் கிடைத்தது.
கொள்ளை நடைபெறுவதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை ஒரு இளைஞர் வாடிக்கையாளரைப் போல நகைக்கடைக்கு வந்து சென்றுள்ளார்.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சட்டைகளை அணிந்து வந்தாலும், ஒரே மாதிரியான தொப்பி மற்றும் கையில் டாட்டூ போட்டிருந்தது உள்ளிட்ட அடையாளங்களை அந்த ஊழியர் கவனித்துள்ளார்.
அவருடைய நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பின்னர் காவல்துறையினர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் குறித்த விவரங்களை ஊழியர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த அடையாளங்களின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போதுதான் நகைக்கடைக்கு முன்னதாக வந்து சென்ற நபருக்கும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யூடியூபர் நிஷாந்த் மீது காவல்துறையினரின் சந்தேகம் வலுப்பெற்றது.
ஒரு நபரின் தோற்றத்தில் இருந்த சிறிய அடையாளங்களைக் கவனித்து நினைவில் வைத்திருந்த ஊழியரின் தகவல், பல கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் முதல் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எரிந்த துணிகள்! துப்பு கொடுத்த மாடு மேய்ப்பவர்!
கொள்ளையடித்த பின்னர் தன்னை அடையாளம் காண முடியாத வகையில் தடயங்களை அழிக்க நிஷாந்த் முயன்றதாகக் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்தனர்.
கொள்ளையின்போது அணிந்திருந்த உடைகள், தொப்பி, கையுறைகள் உள்ளிட்ட பொருட்களை மாடக்குளம் கண்மாய் அருகே உள்ள விவசாய நிலப்பகுதிக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் யாருக்கும் தெரியாது என அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால், அந்தப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் துணிகள் எரிக்கப்படுவதையும், சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதையும் கவனித்துள்ளார்.
இந்தத் தகவல் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அங்கு சென்ற ஆட்டோவின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர்.
விசாரணையில் அந்த ஆட்டோ நிஷாந்தின் தந்தை சுரேஷுக்குச் சொந்தமானது என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று மறைக்க அதைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
தொடர்ந்து நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவருக்கு நெருக்கமான இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி நாச்சியார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மாடக்குளம் பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.
கொள்ளையில் பயன்படுத்திய பொருட்களை எரித்துவிட்டால் தடயங்கள் அழிந்துவிடும் என நினைத்த குற்றவாளியின் திட்டத்தை, கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண மனிதரின் கவனிப்பு முறியடித்தது.

திருப்பூரில் செல்போன் கொடுத்த வழிப்போக்கர்! ஒரு தொலைபேசி அழைப்பால் சிக்கிய கூட்டாளிகள்!
காவல்துறையினர் தன்னைத் தேடுவதை அறிந்த நிஷாந்த், தனது செல்போனை அணைத்துவிட்டு வெவ்வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அவருடைய செல்போன் மூலம் நேரடியாக இருப்பிடத்தைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பூரில் இருந்தபோது, தனது காதலியான மீனாட்சியிடம் பேசுவதற்காக அடையாளம் தெரியாத ஒருவரிடம் செல்போனை இரவல் வாங்கி பேசியதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது சொந்த செல்போனை பயன்படுத்தாமல் வேறொருவரின் செல்போனை பயன்படுத்தி பேசியதால் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடலாம் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அந்தத் தொலைபேசி அழைப்பின் பின்னணியைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த காவல்துறையினர், நிஷாந்த் திருப்பூர் பகுதியில் இருந்ததையும், அவர் தொடர்பு கொண்ட நபர் குறித்தும் விசாரணையை தொடர்ந்தனர்.
இதன் மூலம் நிஷாந்தின் நடமாட்டம் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
அந்த ஒரு தொலைபேசி அழைப்பு, தலைமறைவாக இருந்த நிஷாந்தின் இருப்பிடத்தை தேடுவதற்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பங்களிப்பை விசாரிப்பதற்கும் உதவியது.
தன்னுடைய செல்போனை அணைத்துவிட்டால் காவல்துறையினரிடம் இருந்து தப்பிவிடலாம் என நினைத்தவருக்கு, மற்றொருவரின் செல்போன் மூலம் மேற்கொண்ட அழைப்பே சிக்கலை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சியில் பார்த்த முகம்… பேருந்தில் நேரில் பார்த்ததும் அடையாளம் கண்ட நடத்துநர்!
இந்த வழக்கின் உச்சகட்டத் திருப்பம் தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே நடைபெற்றது.
ஒன்பது தனிப்படைக் காவல்துறையினரின் தேடுதல் வேட்டையையும் மீறி பல்வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்ற நிஷாந்த், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது பேருந்தின் நடத்துநர், தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான நிஷாந்தின் புகைப்படத்தை ஏற்கெனவே பார்த்திருந்ததால், பேருந்தில் பயணம் செய்த நபரின் தோற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்.
அவர் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் நடத்துநருக்கு ஏற்பட்டது.
உடனடியாக தனது பேருந்தின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார். ஓட்டுநர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் உள்ள தனது பள்ளி தோழரான காவலர் ஒருவரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, பேருந்து செல்லும் வழியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். பின்னர் சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
பேருந்து நிறுத்தப்பட்டதும் காவல்துறையினர் சுற்றி வளைத்திருப்பதை உணர்ந்த நிஷாந்த், ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், ஏற்கெனவே தயாராக இருந்த காவல்துறையினர் அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
இதன்மூலம் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்து வந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்த் காவல்துறையினரிடம் சிக்கினார்.
ஒரு குற்றவாளியின் புகைப்படத்தைச் செய்திகளில் பார்த்து நினைவில் வைத்திருந்து, நேரில் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்ட பேருந்து நடத்துநரின் விழிப்புணர்வு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

நான்கு மனிதர்கள்… நான்கு முக்கியத் தகவல்கள்… முழுமையாக மீட்கப்பட்ட நகைகள்!
நகைக்கடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து சென்ற இளைஞரைக் கவனித்த ஊழியர்…
தடயங்களை அழிக்க துணிகள் எரிக்கப்படுவதைப் பார்த்த மாடு மேய்ப்பவர்…
தனது செல்போனை இரவல் கொடுத்ததால் விசாரணைக்கு முக்கியத் தடம் கிடைக்க உதவிய வழிப்போக்கர்…
தொலைக்காட்சியில் பார்த்த முகத்தை நினைவில் வைத்து, பேருந்தில் பயணித்த நிஷாந்தை அடையாளம் கண்ட நடத்துநர்…
இவர்கள் நான்கு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்தவர்கள்.
ஆனால், இவர்களுடைய கவனிப்புகளும் தகவல்களும் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கின் விசாரணையில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தின.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகள் திட்டமிட்டாலும், காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைக்கு பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
குறிப்பாக, கொள்ளையடிக்கப்பட்ட 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளையும் முழுமையாக மீட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் காவல்துறையினரின் தீவிர விசாரணை… மறுபக்கம் சாமானிய மக்களின் சமூகப் பொறுப்புணர்வு… இவை இரண்டும் இணைந்ததன் விளைவாகவே பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளை வழக்கு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.
“குற்றவாளிகள் எவ்வளவு புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டாலும், விழிப்புடன் இருக்கும் ஒரு சாமானிய மனிதரின் பார்வையில் இருந்து தப்ப முடியாது” என்பதற்கு மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கே சாட்சி!
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

