திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்துவிட்டு, பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் நிதி நிறுவன உரிமையாளர் தலைமறைவானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையில் ‘சிகரம் தொடு சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நடுகுத்தகை பகுதியைச் சேர்ந்த ஃபெரிக் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சாதாரண மற்றும் சிறப்புத் திட்டங்கள் எனப் பல்வேறு பெயர்களில் சீட்டுகள் நடத்தப்பட்டு, தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ஏலச்சீட்டு எடுத்த வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 16- ம் தேதி நிறுவனத்திற்கு வந்த வாடிக்கையாளர்களிடம், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைக்கான காசோலைகள் மறுநாள் (17-ஆம் தேதி) வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் நிறுவன உரிமையாளர் ஃபெரிக்கின் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று காலை 9 மணியளவில் நிதி நிறுவனத்தில் குவிந்தனர்.
அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் பணம் குறித்து கேட்டபோது முறையான பதில் கிடைக்காததால், வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தாங்கள் டிபன் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட சிறு தொழில்கள் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்திலிருந்து நாள்தோறும் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி வந்ததாகவும், தற்போது தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையடுத்து, நிறுவன உரிமையாளரை செல்போனில் தொடர்புகொள்ள போலீசார் முயன்றபோதும் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன ஊழியர்களிடம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தி வந்ததாகவும், பல கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த நிதி நிறுவனத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
செய்திகள் : A. மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

