கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளதால் இணையம் வாயிலாக கிளவுட் முறையில் வீடியோக்களை சேமித்தால் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய முடியும் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்


காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் ​கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க நகைக்கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தப்பட்டது.

நகை கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களாக கடையின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், விற்பனை மேசைகள் மற்றும் வெளிப்புறங்களில் மறைவிடங்கள் இல்லாத வகையில் உயர்ரக சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்த வேண்டும். இரவு நேரங்களிலும் முகங்களைத் தெளிவாகப் பதிவு செய்யும் வசதியும், இணையதளத்தில் கிளவுட் (Cloud) பேக்கப் வசதியும் அவசியம் இருக்க வேண்டும்.

பதிவுக் கருவிகளைப் பாதுகாப்பான இடத்தில் வைத்து, தேதி, நேரம் மற்றும் செயல்பாட்டைத் தினமும் சரிபார்க்க வேண்டும். லாக்கர்களைக் கான்கிரீட் மூலம் உறுதியாகப் பொருத்தி, அதிர்வு மற்றும் நடமாட்ட உணர் சென்சார்களை அமைக்க வேண்டும்.

ஷட்டர்கள் மற்றும் கதவுகளில் அலாரங்களைப் பொருத்தி, அவசரக் காலங்களில் உரிமையாளருக்கும் காவல்துறைக்கும் உடனடித் தகவல் செல்லுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கூரை, எக்ஸாஸ்ட் ஓட்டைகள் மற்றும் பின்புறப் பகுதிகளை இரும்புக் கம்பிகள் மற்றும் வெளிச்சம் மூலம் பலப்படுத்த வேண்டும்.ஊழியர்கள் மற்றும் காவலாளிகளின் பின்னணியைக் காவல்துறை மூலம் சரிபார்ப்பதோடு, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் தொகை வரவு ஆனதை உறுதி செய்த பிறகே பொருட்களை வழங்க வேண்டும்; OTP மற்றும் கடவுச்சொற்களைப் பகிர கூடாது.

​கடையை மூடும்போது அனைத்து நகைகளையும் லாக்கரில் வைத்து, அலாரங்கள் மற்றும் ஷட்டர்கள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் நகை மற்றும் அடகு கடை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செய்தியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் அளித்த பேட்டி, விரைவில் அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சி எஸ் ஆர் நிதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்களில் உள்ள ஹார்ட் டிஸ்கை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளதால் இணையம் வாயிலாக கிளவுட் முறையில் வீடியோக்களை சேமித்தால் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய முடியும் என தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஸ்ரீபெரும்புதூர் (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் அருள்மணி, உத்திரமேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கேசவன், எஸ் பி அலுவலக காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ், சைபர் கிரைம் ஆய்வாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி .அரவிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed