மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழமடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன், விவசாயி. இவர மேலக்காலில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியேறிய ஆட்டோ ஒன்று, குமரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதுகுறித்து குமரன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், குமரனை வாகனத்திலிருந்து கீழே இழுத்துத் தள்ளி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

மேலும், கீழே விழுந்த குமரனின் கழுத்தை தனது கால்களால் பயங்கரமாக மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து அங்கேயே மயங்கிச் சரிந்த குமரனை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 27.10.2026 அன்று காடுபட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குமரனின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் கொடுக்கப்பட்டு 14-நாட்களுக்கு மேலாகியும், ஆட்டோ ஓட்டுநர் முருகன் மீது காவல்துறையினர் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விவசாயி குமரனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
