70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், பணம் கொள்ளை; மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை…


காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில், ஒரே நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேவரியம்பாக்கம் அடுத்த லிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சொந்தமாக லோடு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராணி, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வனத்துறையில் பணிபுரிந்து வருவதால், அங்குள்ள அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், விஜயகுமார் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காகச் சென்றுவிட்டு, குழந்தைகளுடன் கட்டைக்கூத்து நிகழ்ச்சியைக் கண்டு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் நள்ளிரவில் உறவினருக்கான சடங்கு தொடர்பாக தனது வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் கட்டிலில் உள்ள மறைவான அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 36 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், சுமார் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதுடன், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதற்கிடையே, அதே கிராமத்தின் பள்ளிக்கூடத் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து சுமார் 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
அந்த வீட்டிலும் காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வாறு ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப்பணம் என சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையின் இரவு நேர ரோந்துப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.

குறிப்பாக, ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது, கிராமப்புறப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததா?
என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கொள்ளையர்களைக் கண்டறிந்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை மீட்கவும், கிராமப்புறங்களில் இரவு நேரக் காவல்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

பேட்டி. ராணி விஜயகுமார்

செய்திகள் : லக்ஷ்மி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed