கோவை, நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி மாணவர் சித்தரஞ்சன், பிம்ஸ்டெக் அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம் , மியான்மர் ஆகிய ஏழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இச்சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்திய அணியின் சார்பில் பல்வேறு தடகளப் பிரிவுகளில் மொத்தம் 95 வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகள் நவம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. இப்போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் பங்கேற்க ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி மாணவர் சித்தரஞ்சன் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இவர் கோயம்புத்தூருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மாணவர் சித்தரஞ்சனை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் – செயலர் , முனைவர் பி.எல். சிவக்குமார் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
