ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் நிர்வாகம்! தொழிலாளர்களை அச்சுறுத்தும் சுற்றறிக்கைக்கு வன்மையான கண்டனம்!​

சென்னை:

தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளாகப் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வரும் 108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள் (EMTs) மற்றும் அவசர ஊர்தி ஓட்டுநர்கள் (Pilots) ஆகியோரின் நியாயமான 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் நாளை (2026 நவம்பர் 3ஆம் தேதி) இரவு 8 மணி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தொழிலாளர் ஆணையரிடம் முறையாக வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் 15, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முந்தைய கட்டப் பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 3ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
​

நிர்வாகத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கை மற்றும் அச்சுறுத்தலுக்குக் கண்டனம்:
​

ஊதியப் பிரச்சினைகள் மற்றும் வேலை நேரக் கோரிக்கைகளுக்குச் சுமுகத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்த தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையிலும் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், GVK EMRI Green Health Services நிர்வாகம் 02-11-2026 அன்று தொழிலாளர்களை அச்சுறுத்தும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு காண முயலாமல், ஒடுக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயக விரோதமானது.
​

முக்கியக் கோரிக்கைகள்:
​

8 மணி நேர வேலைமுறை: மிகுந்த மன அழுத்தத்துடனும் உடல் சோர்வுடனும் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரப் பணிமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
​கூடுதல் பணி ஊதியம்: கூடுதல் நேரப் பணிக்கான (OT) ஊதியத்தை வெளிப்படையாகவும் உரிய முறையிலும் வழங்க வேண்டும்.
​ஊதியப் பாதுகாப்பு: ஊதியக் குறைப்பைத் திரும்பப் பெறுவதுடன், நிலுவைத் தொகைகள் மற்றும் ஊதிய உயர்வு உட்பட 11 அம்சக் கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
​

அரசின் உடனடித் தலையீட்டிற்கு வேண்டுகோள்:


​தொழிலாளர்களின் நோக்கம் வேலைநிறுத்தம் செய்வதல்ல; தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதே ஆகும். ஆனால், அரசாங்கமும் நிர்வாகமும் தொழிலாளர்களைப் போராட்டத்திற்குத் தள்ளுகின்றன.
​நவம்பர் 3ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் நிர்வாகமும் பொறுப்புடன் தலையிட்டுச் சுமுகத் தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில், முன்கூட்டியே அறிவித்தபடி நவம்பர் 3ஆம் தேதி இரவு 8 மணி முதல் தமிழகம் முழுவதும் 108 அவசர ஊர்தித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed