அட்டானமஸ் எனப்படும் தன்னாட்சி நிறுவனமாக புற்றுநோய் மையம் செயல்படும் என்ற வதந்திக்கு அமைச்சர் கோ.க. அருண்ராஜ் முற்றுப்புள்ளி.இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம், காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரியில் முதல்வர் திறந்து வைப்பார் – அமைச்சர் கோ.க.அருண்ராஜ் பேட்டி
காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்குள் இந்தியாவிலேயே மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் திறந்து வைப்பார் என மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் தமிழக அரசால் இந்தியாவிலேயே தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தினை மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், நிதி நிலை அறிக்கையில் மாநில அளவில் தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றும், 5 மண்டல அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் காஞ்சிபுரத்தில்,


இந்தியாவிலேயே மிகத்தரமான இந்த புற்றுநோய் சிகிச்சை மையம் ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 750 பேருக்கான படுக்கை வசதிகளோடு 5 மாடிக் கட்டிடமாகவும், 11 தானியங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் அரங்கம், அதிநவீன கருவிகள், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்தம் மற்றும் கட்டிகள் பரிசோதனை செய்யும் அரங்குகள் உள்பட அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
மருத்துவமனையின் 5 மாடிக் கட்டடமும் ஆய்வு செய்யப்பட்டதில், சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் சிறப்புகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லி, வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அழைத்து வரப்படுவார் என்றார்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அட்டானமஸ் எனப்படும் தன்னாட்சி நிறுவனமாக மாற்ற திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் பேசப்பட்டு பின்னர் அரசாணை வெளியிடப்பட்டதாக நீண்ட நாட்களாக தகவல் பரவி கொண்டுள்ளது . அது தொடர்பாக கேள்வி கேட்டபோது, அப்பக்ஸ் போன்ற பல்நோக்கு மருத்துவமனையாக இது தரம் உயர்த்தப்படும். எல்லா மருத்துவமனைகளிலும் செயல்படுகின்றததுபோல இங்கும் பே வார்டு இருக்கும். அதைத் தவிர அனைத்து நபர்களுக்கும் சிகிச்சை இலவசம் என உறுதிப்பட தெரிவித்து தன்னாட்சி நிறுவன வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கேத் லேப் எனப்படும் இருதய சிகிச்சை பிரிவு கைவிடப்பட்டதை பற்றி கேட்டதற்கு, கேத் லேப் மூடப்பட்டதா என மிகவும் அதிர்ச்சியுடன் வினா எழுப்பி, தலைமை மருத்துவமனை தொடர்பான அதிகாரிகளை தேடும்போது அவர்கள் யாரும் இல்லாததால் இது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கின்றேன் என தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சோலார் பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு சோலார் மின்வசதி பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், உத்தரமேரூர் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, அரசு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.சரவணன், நிலைய மருத்துவ அலுவலர் சிவகாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரசன்னா, சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்திகள் : லஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
