தமிழர் பாரம்பரியப் புழங்கு பொருட்கள் கூறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா உள்ளிட்டோர்
தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்க வகையில் வாழும் வீட்டையே புழங்கு பொருட்கள் காட்சியகமாக அமைத்து
பழமையைப் பாதுகாத்து பாரம்பரியத்தின் அறிவியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்து வருகின்றனர். எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் பார்வையிட்டு காட்சியகம் குறித்து கேட்டறிந்தார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோக ஆசிரியர் விஜயகுமார் காட்சியகம் குறித்து பேசுகையில்,தமிழர் பண்பாடு என்பது மொழி, இலக்கியம், கலை, கட்டடக்கலை ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு புழங்கு பொருளும் அவர்களின் அறிவியல் சிந்தனை, தொழில்நுட்பத் திறன், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன.இன்றைய நவீன அறிவியல் உலகில் நாம் புதுமையாகக் கருதும் பல தொழில்நுட்பங்களுக்கான அடிப்படைக் கூறுகள் நமது பாரம்பரியப் பயன்பாட்டுப் பொருட்களில் காணப்படுகின்றன.

தமிழர் பாரம்பரிய சமையலறையில் பயன்படுத்தப்பட்ட மண் பானை, இரும்புச் சட்டி, செம்புப் பாத்திரம், வெண்கலப் பாத்திரம், கல் உரல், அம்மி, ஆட்டுக்கல், முறம், சல்லடை, மர அகப்பை போன்ற பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பயன்பாட்டையும் அறிவியல் பின்னணியையும் கொண்டுள்ளன. மண்ணால் செய்யப்பட்ட பானைகளின் நுண்துளைகள் வழியாக நடைபெறும் ஆவியாதல், உணவுப் பொருட்களின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. மெதுவான வெப்பப் பரவல் உணவு சமைக்கும் முறையிலும் தனித்தன்மையை ஏற்படுத்துகிறது. இரும்புப் பாத்திரங்களில் உணவு சமைப்பது உணவில் சிறிதளவு இரும்புச் சத்து சேர உதவலாம். செம்பு வெப்பத்தை நன்றாகக் கடத்தக்கூடிய உலோகம். இதனால் சமையல் மற்றும் நீர் சேமிப்பில் பயன்பட்டது.

அம்மி மற்றும் ஆட்டுக்கல் ஆகியவை உணவுப் பொருட்களை அரைக்கும் போது இயந்திர அழுத்தம், உராய்வு மற்றும் விசை ஆகிய இயற்பியல் கோட்பாடுகள் செயல்படுகின்றன. மின்சாரம் இல்லாமலேயே இயற்கையான முறையில் உணவுப் பொருட்களை அரைக்கும் தொழில்நுட்பமாக இவை விளங்குகின்றன.தமிழர்களின் பாரம்பரிய வேளாண்மை முறைகள் இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை.ஏர், கலப்பை, மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை, மரக்கலப்பை, தண்ணீர் இறைக்கும் கருவிகள் போன்றவை விவசாயத்தின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன.
ஏரின் அமைப்பு மண்ணை உழுவதற்கான விசையைச் சரியாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் ஏற்றம் போன்ற கருவிகள் மனித உழைப்பையும் இயந்திரவியல் கோட்பாடுகளையும் இணைத்தன.
பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளான ஏரி, குளம், கண்மாய், ஊரணி, கால்வாய் ஆகியவை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், வெள்ளநீர் மேலாண்மை போன்ற சுற்றுச்சூழல் அறிவியலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

அளவீட்டுக் கருவிகளில் கணித அறிவை காணலாம்.முன்னோர்கள் பயன்படுத்திய மரக்கால், படி, உழக்கு, நாழி, ஆழாக்கு, துலாக்கோல், தராசு, நிறைக்கற்கள் போன்றவை அன்றாட வணிகத்தில் அளவீட்டுத் துல்லியத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளாகும்.
இவை கணிதம், அளவியல், எடையியல் மற்றும் வணிகத் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை வெளிப்படுத்துகின்றன.
தராசின் இரு தட்டுகளும் சமநிலையை அடிப்படையாகக் கொண்டவை. இது இயற்பியலில் உள்ள சமநிலை மற்றும் விசைச் செயல்பாடுகளுடன் தொடர்புடையது.வீட்டு உபயோகப் பொருட்களில் சுற்றுச்சூழல் அறிவியல் அறிந்து பனை ஓலைப் பெட்டி, மூங்கில் கூடை, பிரம்புக் கூடை, சுளகு, முறம், துடைப்பம், மரப்பெட்டி, மண்பாண்டங்கள் போன்றவை இயற்கையில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டன.இவை எளிதில் மட்கக்கூடியவை அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக விளங்கின.இன்றைய உலகம் பேசும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி, இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற கருத்துகளை நமது முன்னோர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையிலேயே கடைப்பிடித்துள்ளனர்.

விளையாட்டுப் பொருட்களில் கணிதமும் உளவியலும் அமைந்துள்ளது.
பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், பம்பரம், கிட்டிப்புள், கண்ணாமூச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி அறிவாற்றலை வளர்க்கும் கருவிகளாகவும் விளங்கின.பல்லாங்குழி விளையாட்டில் எண்ணுதல், எண்ணிக்கைப் பகிர்வு, கணிதக் கணக்கீடு, திட்டமிடுதல், நினைவாற்றல் ஆகிய திறன்கள் வளர்கின்றன.
தாயக்கட்டை விளையாட்டில் நிகழ்தகவு, முடிவெடுத்தல், திட்டமிடுதல் போன்ற சிந்தனைத் திறன்கள் செயல்படுகின்றன.
பம்பரம் சுழற்சி இயக்கம், கோண உந்தம் போன்ற இயற்பியல் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் பாரம்பரிய விளையாட்டுப் பொருளாகும்.
இசைக்கருவிகளில் ஒலி அறிவியல் உள்ளது.பறை, தவில், உடுக்கை, நாதஸ்வரம், குழல், யாழ் போன்ற தமிழர் இசைக்கருவிகள் ஒலியியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
தோல் கருவிகளில் அதிர்வுகளின் மூலம் ஒலி உருவாகிறது. குழல் போன்ற காற்றுக் கருவிகளில் காற்றின் அதிர்வு ஒலியை உருவாக்குகிறது.கருவிகளின் அளவு, வடிவம், பொருள், காற்றின் இயக்கம் ஆகியவை ஒலியின் தன்மையைத் தீர்மானிக்கின்றன.இவை தமிழர்களின் இசை அறிவையும் ஒலியியல் தொழில்நுட்பத்தையும் எடுத்துரைக்கின்றன.இன்றைய தலைமுறையினர் நவீன மின்னணுப் பொருட்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றின் வருகையால் நமது பாரம்பரியப் புழங்கு பொருட்கள் பல பயன்பாட்டிலிருந்து மறைந்து வருகின்றன.ஒரு பழைய பொருளைப் பாதுகாப்பது என்பது வெறும் பொருளைப் பாதுகாப்பது மட்டுமல்ல; அதனுடன் தொடர்புடைய வரலாறு, தொழில்நுட்பம், கைவினைஞர்களின் திறமை, சமூக வாழ்க்கை, பண்பாடு ஆகியவற்றையும் பாதுகாப்பதாகும்.

புழங்கு பொருட்கள் காட்சியகங்கள் மூலம் ஒவ்வொரு பொருளின் பெயர், பயன்பாடு, தயாரிக்கப்பட்ட பொருள், தயாரிப்பு முறை, அறிவியல் பின்னணி, வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தி இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
அறிவுக்கு முதலிடம் கொடுத்து அந்த அறிவை, நூல்கள் மூலம் பெற வேண்டும் என தன் வீட்டிலேயே நூலகம் வைத்து தன் வீட்டில் இருப்பவர்களையும் மற்றவர்களையும் நூல்கள் படிக்க தூண்டியதற்கு திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கம் சார்பில் 2014 அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் திருவாளர் புத்தகப் பிரியர் என்ற பட்டம் வழங்கியது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வாழும் வீட்டையே நூலகமாக மாற்றிய யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் சேவை உள்ளத்தை பாராட்டி அவேர்னஸ் அப்பா அம்மா அறக்கட்டளை சார்பில் 2024 அறிவுச்சோலை விருது
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அனுதினமும் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ளனர். மேலும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனித நேயப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.‌26 முறை இரத்ததானம் வழங்கி உள்ளார். வாழ்நாளிற்கு பிறகு உடல்தானத்திற்கு உறுதியேற்று திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக் கல்லூரியில் உடல்தானத்திற்கு பதிவு செய்து உள்ளார்.அஷ்டாங்க யோகம், பிராணயாமம், தியானம் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.இவரது சமூக சேவை மூலம் சமூகத்தில் ஆதரவற்றவர்கள் இறந்தால் ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்க முறையில் கண்ணியமாக இறுதி மரியாதை செலுத்துவது அவசியம் என செயல்பட்டு வருகிறார்.


குறிப்பாக மனைவி, மகளுடன் இணைந்து செயல்படுவது வருங்கால சந்ததியினருக்கு பெண்களும் ஆதரவற்ற உரிமை கோரப்படாத உடலுக்கு இறுதி சடங்கு செய்யலாம் என்பதை எடுத்துரைத்து வருகிறார்.

யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் தன்னலமற்ற மனிதாபிமான சேவையினால் குழந்தைகள், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், சாலை, ரயில் விபத்தில் இறந்தவர்கள்,
தொற்றும், தொற்றாத நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என பெயர் விலாசம் தெரியாத நபர்கள் உடலை சரக காவல்துறை காவலர்கள் முன்னிலையில் இடுகாட்டில் உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார். இவரது தன்னலமற்ற மனித நேயப் பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் 2023 சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழும்,25 ஜனவரி 2023
சூரியனார் கோவில் ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிறந்த மனிதநேய விருதும்,
22 மே 2025 திருவாடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம் மனிதநேய மாமணி விருதும்,
26 ஜனவரி 2026 தமிழ்நாடு ஆளுநர் விருது தனிநபர் பிரிவில் விருதும் பெற்றுள்ளார்
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச
நூலகத்தில் புத்தக சேகரிப்பு, நூற்பட்டியல், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளிலிருந்து நூல்களை எண்ணிமமாக்குதல், பொது ஆய்வுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆராய்ச்சிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அரிய, அல்லது பழமையான புத்தகங்களைத் தேடிப் பிடித்து, அவற்றை ஒழுங்கமைத்து,இல்லத்திலேயே இலவச நூலகம் அமைத்துள்ளார்.
ஆசிரியர், பொருள், அல்லது காலம் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்தி
உள்ளார்.வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதுடன், வரலாற்று ஆவணங்களைச் சேமித்து வைத்து வருகிறார். புத்தகங்கள் மற்றும் புழங்கு பொருட்கள் கொடையாக வழங்க விரும்புபவர்கள் நூலகத்திற்கும், காட்சியகத்திற்கும் வழங்கலாம்.
தொடர்பிற்கு 9842412247

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed