திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், பல்வேறு விஷயங்களுக்காகவும் வெளியூர்களுக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் மீண்டும் வீடு திரும்புகின்றனர். அதேபோல், பள்ளி, கல்லூரி தினசரி பணிகளுக்கு சென்று வருவோர் உள்ள நிலையில் பல்வேறு பணிகள் காரணமாக வெளியில் செல்லும் பெண்களும் அதிகரித்துள்ளதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கும், பொன்னேரியில் இருந்து செங்குன்றம் பகுதிகளுக்கும் சென்று வர அதிகமாக மாநகர பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பழவேற்காட்டிற்கும் மாநகர பேருந்து இயக்கப்படும் மார்க்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்று சேர மாநகர பேருந்துகளை நம்பியே பள்ளி மாணவ – மாணவிகள், கல்லூரி மாணவ – மாணவிகள் பெண்கள் உள்ளனர். நேரத்திற்கு வாகனங்கள் இயக்கப்படாததால் கூட்டம் அதிகமாகி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், ஒரே நேரத்தில் நான்கு ஐந்து மாநகர பேருந்துகள் வரிசையாக வந்து நிற்பதும் எந்த பேருந்தில் யார் ஏறுவது என்பதை தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர்கள் மக்களை ஏமாற்றி வாகனங்களை எடுத்து கிளம்புவதும் வாடிக்கையாகி வருகிறது.

மாநகரப் பேருந்துகளில் தற்போது இரு பக்க மூடும் கதவுகள் உள்ளதால் சில நேரங்களில் சில ஓட்டுனர்கள் கதவுகளை திறக்காமலேயே கூட்டத்தை பார்த்துவிட்டு வாகனத்தை எடுத்து சென்று விடுகின்றனர். அப்படி எடுத்துச் சென்ற வாகன ஓட்டுநர்களை பொதுமக்கள் கேட்கும் போது அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும் ரவுடிகள் போன்று எகிறி கொண்டு வருவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, மாநகரப் பேருந்துகளில் முன்பு போல் ஒய்ஃபை (wi-fi)
வசதி பொது மக்களுக்கு கிடைப்பதில்லை, அதனால், பொதுமக்கள் தங்கள் செல்போன்கள் மூலம் பேருந்துகள் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும், கல்லூரி மாணவ – மாணவிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

நாம் விசாரித்ததில் மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களே அந்த ஒய்ஃபை வசதி இணைப்பை துண்டித்து விடுவதாக கூறப்படுகிறது. அதனால், பேருந்துகள் எந்த இடத்தில் உள்ளது என்று மாநகரப் பேருந்து நிர்வாகமும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. அதனால் பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல் ஒரு இடத்தில் ஐந்தாறு பேருந்துகள் தேங்கி நிற்கின்றன.

அதேபோல் தான், இன்று மாலை பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்வதற்கு ஐந்து மணியிலிருந்து பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் பழவேற்காட்டில் 7 பேருந்துகள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

அதை பார்த்த பொதுமக்கள் மிகவும் வேதனைப்பட்டு, பொன்னேரியில் இரண்டு மணி நேரமாக பேருந்துகள் இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு தலைவேற்காடு வந்து சேர்ந்து இருக்கிறோம். ஆனால் இங்கு எத்தனை பேருந்துகள் கூட்டமாக நிற்கின்றன நீங்கள் அனைவரும் டீக்கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறீர்களே என, பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களை பார்த்து முறையிட்டபோது, பொதுமக்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது மட்டும் இல்லாமல்,

நாங்கள் மாநகர பேருந்து ஓட்டுநர்கள் நீங்கள் கேட்க வேண்டும் என்றால் விழுப்புரம் கோட்ட பேருந்து நிர்வாகத்தை போய் கேளுங்கள் என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார்கள். பொன்னேரி பகுதி விழுப்புரம் கோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டது என்பதால், சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இப்பகுதியில் ஏதோ வேண்டா வெறுப்பாக பணி செய்வதைப் போல் செயல்படுகின்றனர்.
சென்னை மாநகரப் பேருந்து நிர்வாகம் இப்படி இருக்க,

இந்நிலையில், விழுப்புரம் கோட்ட பேருந்தின் பொன்னேரி பணிமனை நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பொன்னேரி பணிமனைக்கு சொந்தமான பெரும்பாலான பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள நாயுடு பேட்டை, சூலூர் பேட்டை, நெல்லூர், திருப்பதி போன்ற ஊர்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, போன்ற பகுதிகளுக்கும் இயக்கி வருகின்றனர். பொன்னேரி பணிமனையின் பேருந்துகள் பொன்னேரியின் உள் 10% விகிதம் பேருந்துகள் கூட இயக்கப்படுவது இல்லை. இதை கேள்வி கேட்க கூட இங்கு நாதியில்லை என்பது தான் கொடுமை,

விழுப்புரம் கோட்ட நிர்வாகத்தின் இதுபோன்ற நிலைமையை மேற்கோள் காட்டித்தான், சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் வேண்டா வெறுப்பாக பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதிகளில் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இவர்களை எல்லாம் கேள்வி கேட்க நாதியில்லையோ…

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed