கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி மாணவர் அ.ஹரிஹரன் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுள் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவர் அ. ஹரிஹரனுக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுள் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவிற்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவரின் இந்த அரிய சாதனையைப் பாராட்டும் வகையில் கல்லூரி சார்பாக மாணவர் அ. ஹரிஹரனுக்கு ரூ.2,50,000 ரொக்கப்பரிசினை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : மாணவரின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு போன்ற பண்பு நலன்கள் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளது. மாணவர் இதற்கு முன்பு தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது. எங்கள் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர் -- மாணவியர்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பதை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இவரைப் போன்று விளையாட்டு்த் துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர் - மாணவியர்களுக்கு இம்மாணவர் முன்னுதாரணமாக திகழ்வார் என்பது உறுதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் , கல்லூரியின் முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் மாணவரைப் பாராட்டி வாழ்த்தினார். மாணவர் பரிசு பெறுகையில் அவரது தந்தை எம்.ஆர்.அம்சகருணனும் உடனிருந்தார்.
சாதனை படைத்த மாணவர் அ. ஹரிஹரனை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தினர்கள், கல்லூரி முதல்வர்- செயலர், முனைவர் பி.எல். சிவக்குமார் உள்பட கல்லூரி துணை முதல்வர்கள், அனைத்து துறை தலைவர் பெருமக்கள், பேராசிரிய பெருமக்கள் , மாணவர்- மாணவியர்கள், விளையாட்டு - சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் , குடும்பத்தினர்கள் , நகர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.
செய்திகள் : மாமு ஜெயக்குமார் எதிரொலி.இன் / 8939476777
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
