மதுரையின் மற்றொரு முக்கிய அடையாளமாகத் திகழும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யால் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், இதன் நவீன வசதிகளும், டிஜிட்டல் முறையிலான காட்சியகங்களும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளன.

மதுரையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி நினைவு அருங்காட்சியகம் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட கட்டமைப்பாகும். இக்கட்டடத்தின் மையப் பகுதி 17-ஆம் நூற்றாண்டில் இராணி மங்கம்மாவால் கட்டப்பட்டு, அவரது கோடைகால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, 1877-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் இக்கட்டடத்தின் தெற்குப் பகுதியும், 1955-ஆம் ஆண்டு மத்திய அரசால் நூலகமாம் உருவாக்கப்பட்டன. 1959-ஆம் ஆண்டு காந்தி நினைவு அருங்காட்சியகம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. காந்தியின் நினைவை போற்றும் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகங்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாளில் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். அவர் மதுரைக்கு வருகை தந்திருந்தபோதுதான், மேல் ஆடையைத் துறந்த ‘மகாத்மா’வாக உருவானார். இந்த வரலாற்றுச் சிறப்பைப் போற்றும் வகையிலும், பொதுமக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பயனுள்ள வகையில் இந்த நினைவகத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மகாத்மா காந்தியடிகள் தொடர்பான அரிய பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இதனை புனரமைப்பதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு க ஸ்டாலின், ரூ.10 கோடிகள் ஒதுக்கீடு செய்தார்.

மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் பாரம்பரியத் தன்மையை மாற்றாமல், சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய், சிறு செங்கற்கள் மற்றும் ஆற்று மணல் போன்ற பாரம்பரிய கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து மெட்ராஸ் டெரஸ் (Madras Terrace) மற்றும் வளைவு வடிவக் கூரைகளும் அவற்றின் பாரம்பரியத் தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அம்சம், வழக்கமான RCC slab போல ஒரே தடிமனான கான்கிரீட் தகடு ஊற்றப்படுவதில்லை. மாறாக, செங்கற்களை வளைவு/சாய்வு முறையில் அடுக்கி, அதன் மேல் சுண்ணாம்பு கலவை மற்றும் waterproofing அடுக்குகள் அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.

ஆரம்பத்தில், கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகத்தில் பல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பாரம்பரியக் கட்டடத்தின் தொன்மையை மீட்டெடுக்கும் பொருட்டு, பழைய சேதமடைந்த கூரை உத்திரக்கட்டைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்குப் பதிலாக புதிய தேக்குமரக் கூரைச்சட்டங்களும், பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்ததை அடுத்து, சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கல்லூரி பள்ளி மாணவ மாணவியரும் பெருந்திரளாக வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர்.

பூவந்தி அருகேயுள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவியர் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர். மாணவியர் ஆர்த்தி மற்றும் ஷர்மி ஆகியோர் கூறுகையில், தற்போது தான் முதல் முறையாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளோம். விடுதலைப் போராட்ட கால வரலாற்றை டிஜிட்டல் முறையில் பார்வையிட்டு நாம் அறிந்து கொள்வது மிக சிறப்பாக உள்ளது. அதேபோன்று மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1959 லேயே மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது அறிந்தோம். அனைத்து பொருட்களும் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.

பார்வையாளர்கள் பயன்பாட்டிற்காக, எட்டு நபர்கள் பயணிக்கக்கூடிய மின்தூக்கி, அதனுடன் இணைக்கும் நடைபாதை அமைக்கப்பட்டு புதிய கழிப்பறைக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலுக்கு அருகில் சிதிலமடைந்த நிலையில் இருந்த குமரப்பா குடில், தேவையான கட்டமைப்பு கிரில் வசதிகளோடு, புதிய துத்தநாகத் தகடு கூரையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி அரங்கின் தரை, கோட்டா கற்கள் பதிக்கப்பட்டு, சரிவுப்பாதையில் தேவையான கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்தத் தேவையான மின்சாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காட்சி அமைப்பு, மகாத்மா காந்தியடிகள் பற்றிய தகவல்களைக் காட்டும் தொடுதிரைக் காட்சிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள், மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள், ரோட்டோஸ்கோப், ஒலி-ஒளிக் காட்சி அரங்கம், டிஜிட்டல் கியோஸ்க்குகள், பொம்மலாட்ட நிகழ்ச்சி ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், நூலகக் கட்டடத்தில் புதிய புத்தக அலமாரிகள் மற்றும் வாசிப்பு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்சேவால் மகாத்மா காந்தி சுடப்பட்ட அன்று அணிந்திருந்த மேலாடை கண்ணாடி பேழையில் இன்று இரவு மிக நேர்த்தியான மின்விளக்குகளுடன் இருட்டு அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும்.

காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் கூறுகையில், ‘இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதன் முதலாக காந்தி நினைவாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதே போன்று தென்னிந்தியாவிலேயே ஒரே அருங்காட்சியகம் இதுதான். மகாத்மா காந்தியின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற இடம் மதுரை. குறிப்பாக 1921ஆம் ஆண்டு அரையாடை புரட்சி, 1939ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் ஆலய பிரவேசம் ஆகியவை அதற்கு குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் தான் மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் அமையும் வாய்ப்பு உருவானது. தமிழ்நாட்டிற்கு 20 முறை வருகை தந்த மகாத்மா காந்தி மதுரைக்கு மட்டும் ஐந்து முறை வருகை தந்துள்ளார்.

தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கே புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது நிறைவு பெற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்துள்ளார். மகாத்மா காந்தி பயன்படுத்திய 14 பொருட்கள் இங்கே பாதுகாப்பாக உள்ளன. அதிலும் குறிப்பாக அவர் இறந்த அன்று அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த வேட்டி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறையினர் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் கியாஸ்க் தொடுதிரை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டம் மற்றும் காந்தியடிகள் வரலாறு குறித்து விளக்கும் பப்பெட் ஷோவும் இங்கு உள்ளது.

தமிழ்நாட்டில் காந்தியடிகள் என்று அரங்கில் உள்ள தொடுதிரையின் வாயிலாக காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்பது நகரங்களில் நிகழ்ந்தவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டுள்ள மினி திரையரங்கில், கால் மணி நேரம் ஓடக்கூடிய மகாத்மா காந்தியின் வரலாறு குறித்த குறும்படம் காட்சிப்படுத்தப்படும். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் உருவான வரலாறும் இதில் இடம்பெறும். வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களும் சரி வெளிநாட்டு உள்நாட்டு பயணிகளும் இனி ஏமாற்றம் இன்றி முழு திருப்தியோடு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை கண்டு களித்து செல்லலாம். நாள்தோறும் காலை 10 மணி – பிற்பகல் 1 மணி; பிற்பகல் 2 மணி – மாலை 5.45 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை’ என்றார்..

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *