கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர், IPS , களியக்காவிளை மற்றும் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோழிவிளை சோதனைச் சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கனிம வளங்கள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் மாவட்ட எல்லை வழியாக கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர வாகனச் சோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறனை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எப்போதும் முழு விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் களியக்காவிளை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
வடசேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு
தொடர்ந்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் வடசேரி காவல் ஆய்வாளர் மோகன் ஐயர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி / 8939476777
