ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் ஊராட்சி, மரியராயபுரம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  
அதனைத் தொடர்ந்து , கடலாடி ஊராட்சி ஒன்றியம், புத்தேந்தல் கிராமத்தில் பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு , குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்ததையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கடலாடி ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் கிராமத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், குடிநீர் பற்றாக்குறையை போக்க கூடுதலாக குடிநீர் வழங்கவும், போர்வெல் அமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர். கிராம மக்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலரை மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கடலாடி ஊராட்சி ஒன்றியம், கணக்கூர் ஊராட்சி, ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். கிராமத்திற்கு கூடுதலாக குடிநீர் வசதி , பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி, பொதுமக்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தொட்டியின் கொள்ளளவு, தற்போதைய நீரின் அளவு , பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா ? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வகையில், அபிராமம் கமுதி பிரதான சாலையிலிருந்து கடம்பன்குளம் – பசும்பொன் கிராமச் சாலையை இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை, பணியின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை உரிய தரத்துடன் விரைந்து நிறைவு செய்ய அலுவலரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து , கமுதி வட்டம், மறைக்குளம் ஊராட்சி, சின்ன உடப்பன்குளம் கிராமத்தில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், விக்கிரபாண்டிபுரம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை வைத்ததையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி , குளியல் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால், தற்போது வழங்கப்படும் குடிநீர் உபரியாக வெளியேறி வீணாகி வருவது குறித்து கேட்டறிந்தார்.

இதனை உடனடியாக சீரமைத்து, குடிநீர் வினாவதைத் தடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசாமி , கிருஷ்ணன் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் , கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பு , கடலாடி வட்டாட்சியர் பரமசிவம் , முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தவள்ளி , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed