ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கிராமத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் காவல்துறை சார்பில் ‘போலீஸ் பாய்ஸ் கிளப்’ (police Boys Club) தொடங்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

​மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், ராஜபாளையம் பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ரமேஷ் தலைமையிலும், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பாக்யராஜ் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ​ராஜபாளையம் தாலுகாவில் உள்ள பின்தங்கிய கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளின் மனநலத்தை ஆரோக்கியமாக மேம்படுத்தவும், சமூகத்தில் நற்பண்புகளுடன் வளர்வதை உறுதி செய்யவும் காவல்துறை சார்பில் ‘போலீஸ் பாய்ஸ் கிளப்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதுகுடி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கிளப்பில் இணைந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

​நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, செல்போன் பயன்பாட்டில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு உடல் உழைப்பு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஓட்டப்பந்தயம், கபடி, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குக் காவல்துறை சார்பில் சிறப்புக் கேடயங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

​இந்நிகழ்வில் முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் திரளாகக் கலந்து கொண்டு, காவல்துறையினருடன் இணைந்து குழந்தைகள் தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed