காஞ்சிபுரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரை “உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை” என பொய் கூறி கடத்திச் சென்று, கத்திமுனையில் நிர்வாணப்படுத்தி 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில் ஈடுபட்ட பதிவேடு குற்றவாளியை சிவகாஞ்சி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

​காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை, தேவராஜபுரம் வேணுகோபால் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி – குமார் தம்பதியின் மகன், அங்குள்ள ஆந்திரேசன் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி இரவு சுமார் 10:00 மணியளவில், பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள எலக்ட்ரிகல் கடை முன்பாக வீட்டிற்குச் செல்வதற்காக அம்மாணவர் ஆட்டோவிற்காகக் காத்திருந்துள்ளார்.

​அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், “உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, உடனே உன்னை அழைத்து வரச் சொன்னார்கள்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மாணவனின் தந்தை குமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாய் பற்றிய பதற்றத்தில் மாணவன் பைக்கில் ஏற மறுத்துள்ளார். ஆனால், “அம்மா ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என வற்புறுத்தி மாணவனை பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.

​மாணவனை அம்மன் குளம் வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றபோது சந்தேகமடைந்த மாணவர் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பைக்கை நிறுத்தி கத்தியைக் காட்டி, “பணத்தையும் செல்போனையும் கொடு, இல்லையென்றால் குத்திவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

​தொடர்ந்து மாணவனை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி சோதனை செய்த பின், அவரிடமிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். பயத்தில் அதிர்ச்சியடைந்த மாணவர், அருகில் இருந்த அரிசி ஆலைக்குச் சென்று அங்குள்ளவர்களின் செல்போன் மூலம் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். மீட்கப்பட்ட மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

​விசாரணையில், இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தீனா (எ) தினேஷ்குமார் (25), த/பெ. முருகேசன் என்பது தெரியவந்தது. பதிவேடு குற்றவாளியான (Nemili PS Hs) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் குற்றவாளி தீனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed