கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காளிங்காவரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜீனராய் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியில் இருந்து விவசாயத்தை காக்க நல்ல மழை பொழிய வேண்டியும், சண்டி ஓமம் நடத்தப்பட்டது.
ஸ்ரீஜீனராய் முனீஸ்வர பீடாதிபதி ஸ்ரீமாதேஷ் நாத் அகோரி தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தண்டி யாகத்தில் முதல் நாளன்று சண்டி பாராயணம், தேவி மகாத்மியம் பாராயணம், லலிதா திரிபுரசுந்தரி பாராயணம், சக்தி மந்திர ஜெபம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளில் சண்டி ஓமம், பூரணாகதி, தீபாராதனை, உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. பொய்கை மரகத்கோட்டை ஸ்ரீ வராகிதாசன் சித்தர், ஸ்ரீ குபேர சித்தர், ஸ்ரீ வெற்றிவேல்நாத் அகோரி, ஸ்ரீ காளி மைந்தன் சிவா சுவாமிகள், உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலுள்ள சித்தர்கள் இந்த சண்டி ஓமம் என்கின்ற யாகத்தில் கலந்துக் கொண்டு யாகப் பூஜையில் ஈடுப்பட்டனர்.
இந்த யாகப் பூஜையில் உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி நவத்தானியங்கள், நருமண திரவியங்கள், வாசனை மலர்கள், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு மூலிகைப் பொருள்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது.

இது குறித்து ஸ்ரீகுபேர சித்தர் கூறுகையில்…..
தமிழத்தில் எந்த ஒரு ஆண்டும் இல்லாத வகையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடிநீர் பஞ்சமும், ஏற்பட்டுள்ளது. இது போன்ற சண்டி யாகம் சித்தர்கள் மூலம் நடத்தப்பட்டால் உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழ்வார்கள் என்றும், நல்ல மழை பெய்து வறண்ட ஏரிகள் மழை நீரால் நிரம்பி விவசாயம் செழித்து விவசாயிகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் நலமுடன் வாழ்வார்கள் என்பதால், இந்த சண்டியாகம் ஸ்ரீஜீனராய் முனிஸ்வர திருக்கோவிலில் சித்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த சண்டி யாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில மக்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டு பிரசாதம் வாங்கிச் சென்றனர். சண்டி ஹோமத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
