​காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு உப்பேரி குளத்தெரு பகுதியில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், புகார்களைத் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​இது குறித்து, வேதனையுடன் பேசிய அப்பகுதி பொதுமக்கள்,

“திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் இல்லம் எங்கள் பகுதிக்கு அருகிலேயே இருந்தும், இந்த அவல நிலையை அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும், எங்கள் பகுதி வழியே சென்ற அமைச்சரிடமும் இந்த குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட்டோம்; அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

​எங்கள் பகுதியில் குழாய்கள் மூலம் குடிநீர் வராததால், சாலையைக் கடந்து நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மாநகராட்சிப் பகுதியிலேயே அடிப்படைத் தேவையான குடிநீருக்கு இந்த நிலைமை என்றால், மற்ற பகுதிகளைப் பற்றி என்ன சொல்வது?” எனப் புலம்பினர்.

உடனடியாக தங்களுக்குச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாவிட்டால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

​இதற்கிடையே, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அப்பகுதி மக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவக்காஞ்சி காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செய்திகள் : லட்சுமி காந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *