காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் 18 ஆண்டுகளாக இயங்கி வரும் நியாயவிலைக் கடையை (கடை எண்: 03BC021PN) வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
நீலமங்கலம் கிராம நத்தம் புல எண் 21/23 பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடை நிலம் தொடர்பாக, ரவி என்பவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், தற்போது இயங்கி வரும் கட்டிடத்தில் இருந்த ரேஷன் கடையை அகற்றி, வேறு இடத்தில் மாற்றம் செய்ய சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.


இதையறிந்த கிராம மக்கள், ரேஷன் கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர். பின்னர், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறியது,
“தற்போது இயங்கி வரும் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றினால், நாங்கள் நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சிரமம் ஏற்படும். இந்த நியாயவிலைக் கடையை நம்பியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும்.


எனவே, நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில், கடையை வேறு இடத்திற்கு மாற்றாமல், தற்சமயம் செயல்பட்டு வரும் பழைய கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்க மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
செய்திகள் : லக்ஷ்மி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777
