25 ஆண்டுகால சமூகப் பணிக்கு சிறப்பு – மாணவர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கல்வி உபகரணங்கள்; 4 பேருக்கு காமராஜர் விருது ;

“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வர வேண்டும்” என்ற பெருந்தலைவர் காமராஜரின் உன்னதக் கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக கல்வி மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பிச்சனூர் பெருந்தலைவர் காமராஜர் தொண்டு மன்றத்தின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா, தொண்டு மன்றத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா, 80-வது சுதந்திர தின விழா மற்றும் பாராட்டு விழா ஆகியவை இணைந்து பிச்சனூர் பலமநேர் ரோட்டில் உள்ள எம்.எஸ். மஹாலில் நடைபெற்றன. மன்றத் தலைவர் கோ. ஜெயவேலு தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர் கே.கே. சிவா என்ற சிவசண்முகம் வரவேற்றார். பொதுச் செயலாளர் ரோட்டேரியன் ஜெ. தமிழ்ச்செல்வன், பொருளாளர் ஜெ. மோகனவேல், மன்ற எழுத்தர் ஜெ. ராம்குமார், ஆலோசகர் ஜி. தியாகராஜன், துணைத் தலைவர்கள் பி. வெங்கடேசன், சி. தயாளன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவர்களுக்கு ரூ.58 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் எஸ். சரவணன் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பள்ளிப் பைகள், பெருந்தலைவர் காமராஜர் தொண்டு மன்றம் சார்பில் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் நாற்காலிகள், முன்னாள் மாணவர் ஜி. பரமகுரு சார்பில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மூன்றடி வட்ட மேசை ஆகியவை வழங்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் மன்றம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு நண்பகல் உணவும் வழங்கப்பட்டது.

4 பேருக்கு காமராஜர் விருது
மாணவர்களின் கல்வி மற்றும் சமூக நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் சிங்கப்பூர் எஸ். சரவணன், சாய் எஸ். ஆனந்தன், தேரடி .ஜி.என் சரவணன் மற்றும் சமூக சேவகர் தி. நந்தகுமார் ஆகிய நான்கு பேருக்கு காமராஜர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கிடைக்கச் செய்வதிலும், அவர்களின் கல்வி மற்றும் நலனுக்காக உதவிகளை ஒருங்கிணைப்பதிலும் தொடர்ந்து பங்களித்து வரும் எஸ். சரவணன், சாய் ஆனந்தன், ஜி.என். சரவணன் ஆகியோரின் சேவைகள் விழாவில் பாராட்டப்பட்டன. 12 ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் கல்விச் சேவை – நந்தகுமாருக்கு விருது
விருது பெற்ற சமூக சேவகர் தி. நந்தகுமார், கடந்த 12 ஆண்டுகளாக சமூக ஊடகங்களை சமூக சேவைக்கான கருவியாக பயன்படுத்தி வருகிறார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்வி வாய்ப்புகள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட தகவல்களை தினந்தோறும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்.

செய்தித்தாள்கள், அரசு இணையதளங்கள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் இருந்து பயனுள்ள தகவல்களைத் திரட்டி, அவற்றை எளிமையான முறையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
“ஒரு மாணவருக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு தகவல், அவரது வாழ்க்கையை மாற்றக்கூடும்” என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் நந்தகுமாரின் சமூக ஊடக சேவையை பாராட்டி காமராஜர் விருது வழங்கப்பட்டது.

மாணவர்கள் மரக்கன்றுகளை நட வேண்டும்” – பசுமை நாயகர் டி. ராஜேந்திரன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற பசுமை நாயகர் Rn. டி. ராஜேந்திரன், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும் என்றார்.
மாணவர்கள் பள்ளி வளாகங்களிலும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். “மாணவர்கள் எங்கு மரக்கன்றுகள் நட விரும்பினாலும், அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கத் தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கவுண்டன்ய மகாநதி கரையோரத்தில் நடைபெறும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு மாணவர்கள் முழு ஆதரவு அளித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
கைபேசியை தவிர்த்து புத்தகங்களை படியுங்கள்” – வழக்கறிஞர் சம்பத்குமார்
மன்றத்தின் சட்ட ஆலோசகரும், மன்றம் தொடங்கப்பட்ட காலம் முதலே உடன் இருந்து வருபவருமான வழக்கறிஞர் சு. சம்பத்குமார் பேசுகையில், காமராஜர் தொண்டு மன்றம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நீண்ட காலத்தில் பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார்.

கங்காதர சுவாமி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மன்றம் பல்வேறு உதவிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் கைபேசி பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, புத்தகங்களை அதிகம் படித்து அறிவை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“தேசப்பற்று, கல்வி –மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியம்” – ஆர்.வி. ஹரிகிருஷ்ணன் விழாவில் பேசிய ஆர்.வி. ஹரிகிருஷ்ணன், மாணவர்களுக்கு தேசப்பற்று அவசியம் என்றும், கல்வியில் முன்னேற்றம் அடைவது வாழ்க்கையில் உயர்வதற்கான முக்கிய அடித்தளம் என்றும் தெரிவித்தார்.

கல்வியின் மூலமே நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனவே மாணவர்கள் நன்றாகப் படித்து தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
15 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த போராடும் ஜெயவேலு”
விருது பெற்ற சாய் எஸ். ஆனந்தன் பேசுகையில், கங்காதர சுவாமி நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக மன்றத் தலைவர் கோ. ஜெயவேலு தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டினார்.
கங்காதர சுவாமி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஜெயவேலு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றும், பள்ளி வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

காமராஜரின் கல்விக் கனவை முன்னெடுக்கும் மன்றம்
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த விழாவில், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதார சூழ்நிலையால் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதே காமராஜரின் கனவு என்றும், அந்தக் கனவை செயல்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஒருபுறம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நேரடியாக வழங்குவது, மறுபுறம் சமூக ஊடகங்கள் வாயிலாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வு தகவல்களை ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது என பல்வேறு வடிவங்களில் நடைபெறும் சமூகப் பணிகள் விழாவில் பாராட்டப்பட்டன.
முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
விழாவில் மன்ற சட்ட ஆலோசகர் சு. சம்பத்குமார், குடியாத்தம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn. Dr. எஸ். வேல்முருகன், . ஞானபிரகாசம், கவிஞர் முல்லைவாசன், மன்ற தணிக்கையாளர் டி. சண்முகம், Dr. ஜெ. சிவசிதம்பரநாதன், ஜெ. சதீஷ்குமார், ஜெ. ஜீவானந்தம், சி. சுரேஷ்குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், கொடையாளர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அடுத்த கட்ட சமூகப் பணிகளுக்கு புதிய உறுதி காமராஜர் தொண்டு மன்றத்தின் 25 ஆண்டுகால பயணம் என்பது வெறும் வெள்ளி விழா கொண்டாட்டமாக இல்லாமல், கல்வி மற்றும் சமூக நலப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய உறுதிமொழியாக அமைந்தது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி, இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகத் தேவைகளில் பின்தங்கிய மக்களுக்கான உதவிப் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விழாவில் வெளிப்பட்டது.

காமராஜரின் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வர வேண்டும்” என்ற கனவை நனவாக்கும் பணியில் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் விழா நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை காமராஜர் தொண்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மன்ற துணைத் தலைவர் சி. தயாளன் நன்றி கூறினார்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed