பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையத்தை தன்னாட்சி (Autonomous) அமைப்பாக உருவாக்க முயற்சியா?

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல், தீயணைப்புத் துறை பாதுகாப்புச் சான்றிதழ், கட்டிட பயன்பாட்டுச் சான்றிதழ் போன்றவை பெறுவதில் சிக்கல் உள்ளதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் காரப்பேட்டையில் தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.218.46 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில், உலகத் தரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களுடன், சுமார் 750 முதல் 1,000 படுக்கைகள் வரை வசதி கொண்ட இந்த பிரம்மாண்ட மருத்துவமனையில், கதிரியக்கப் புற்றுநோய் சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு, நல் ஆதரவு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஏற்கனவே இருந்த தமிழக அரசு கூடுதல் நிதியையும் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படும் இந்த மருத்துவமனை கடந்த ஒரு வருடமாக இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.

இந்த மருத்துவமனை செயல்படுவதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல், தீயணைப்புத் துறை பாதுகாப்புச் சான்றிதழ், கட்டிட பயன்பாட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு உள்ளிட்ட பல்வேறு இறுதி அனுமதிகள் அவசியம் என்கின்ற நிலையில்,

தேவையான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுவிட்டனவா? அல்லது ஏதேனும் நிர்வாக நடைமுறைகள் இன்னும் நிலுவையில் உள்ளனவா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதற்கிடையில், புதிய கட்டிடம் தயாராக இருந்தும் நோயாளிகள் தொடர்ந்து பழைய மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலை நீடிப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிய மருத்துவமனை திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சில நோயாளிகள் அருகே உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அது மட்டுமின்றி, மருத்துவத் துறை வட்டாரங்களில் மற்றொரு தகவலும் பரவுகிறது. பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை போன்று, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையத்தையும் எதிர்காலத்தில் தன்னாட்சி (Autonomous) அமைப்பாக உருவாக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

எனவே, அனைத்து அனுமதிச் சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டனவா?
இல்லையெனில் எந்தச் சான்றிதழ்கள் இன்னும் நிலுவையில் உள்ளன?
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனம் முழுமையடைந்துவிட்டதா?
நோயாளிகள் புதிய கட்டிடத்தில் சிகிச்சை பெறுவது எப்போது தொடங்கும்? போன்ற தகவலுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அதிநவீன புற்றுநோய் ஒப்புயர்வு மையம் எப்போது திறக்கப்படும்? காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகள் / லட்சுமி காந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed