கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர் - மாணவியர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு , எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவர் முனைவர் ஈ.பாலகுருசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு அழைப்பாளர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், ஈபிஜி ஃபவுண்டேஷன் தலைவர் முனைவர் ஈ பாலகுருசாமி பேசியதாவது :
40 ஆண்டு கால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரிய பெருமக்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்து கொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் - மாணவியர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர் - மாணவியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர் – மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. விழாவில் 2, 250 மாணவர், மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
