நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை ஊராட்சிக்கு உட்பட்ட ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை, வெயிலில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண், கங்காரு கருணை இல்லங்கள் மனோகர் தலைமையிலான மீட்புக் குழுவினரால் இன்று மீட்கப்பட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சமூக ஆர்வலர்கள்!
ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நாட்களாகப் பாதுகாப்பற்ற நிலையில் அந்தப் பெண் இருந்து வந்தது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாகப் பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181 கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, காவல்துறை, சமூக நலத்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனிதநேயத்துடன் மீட்பு நடவடிக்கை!
இந்நிலையில், அக்டோபர் 18 ம் தேதி கங்காரு கருணை இல்லங்கள் மனோகர் தலைமையிலான மீட்புக் குழுவினர் அப்பெண்ணை மீட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் மூலம், பல நாட்களாகச் சாலையோரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பெண்ணுக்குப் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரது அடையாளம், குடும்பப் பின்னணி, சொந்த ஊர் ஆகிய விவரங்களைக் கண்டறிந்து, குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்த இயலுமா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவிக்கரம் நீட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
இந்த மீட்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, 108 மற்றும் 181 கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், வேதாரண்யம் சரக காவல்துறையினர், தாமரைப்புலம் கல்பனா சாவ்லா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த S. காளிதாஸ் உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட்டதன் மூலம் இந்த மனிதநேய நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது.
சாலையோரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் யாரேனும் இருப்பதைக் கண்டால், அவர்களைப் புறக்கணிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உதவ முன்வர வேண்டும் என்பதே இந்த நிகழ்வு உணர்த்தும் செய்தியாகும்.
மனிதநேயம் வாழ்க! உதவும் கங்காரு கணைக்கரங்கள் மனிதநேயத்திற்கீ பாராட்டும் நன்றியும் ஓங்குக!

செய்திகள் : நாகை, மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed