காஞ்சிபுரம் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் திருவேங்கட அம்மன் தெருவில், 32 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியின்றி கடும் இருளில் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

மின் இணைப்பு கோரி அரசு அலுவலகங்களின் கதவுகளை 50 முறைக்கும் மேல் தட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வே எண்கள் 17A, 18A மற்றும் 19A பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கான மின் இணைப்பை, திமுகவினரும் அதிகாரிகளும் இணைந்து முறைகேடாக சர்வே எண்கள் 20 மற்றும் 21-க்கு மாற்றிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மனிதர்கள் வாழும் வீடுகளுக்கு மின்சாரம் மறுக்கப்படும் நிலையில், அப்பகுதியில் உள்ள மாட்டுக்கொட்டகைகள், கார் ஷெட்டுகள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு மட்டும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தெருவில் மின்கம்பங்கள் நட்டு 3 ஆண்டுகள் ஆகியும் வீடுகளுக்கு இணைப்பு தரப்படாததால், இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டத்திற்கு இடையே பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் இந்த நீண்டகால அலட்சியத்தைக் கண்டித்து, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிள்ளையார்பாளையம் திருவேங்கம்பன் to சாலபோகம் சாலையில் பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மோகன் மற்றும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “மாட்டுக்கொட்டகைக்கும் கார் ஷெட்டுக்கும் மின்சாரம் வழங்கும் நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறது? நாங்கள் என்ன அகதிகளா?” என அவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.


இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் மற்றும் நில அளவையாளர் அப்பகுதி வரைபடங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777
