காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரி சத்திரம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் காஞ்சிபுரம் – திருப்பதி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊவேரி சத்திரம், வேளீயூர் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ச்சியாக மின்விநியோகம் தடைபட்டு வந்துள்ளது. இதனால் நள்ளிரவில் ஆவேசமடைந்த பொதுமக்கள், காஞ்சிபுரம் – திருப்பதி நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி கரை காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
“கடந்த 10 நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தேவைகளுக்கும், குழந்தைகளைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவும் முடியாமல் தவித்து வருகிறோம்.

இது தொடர்பாக மின்சார வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வருகின்றனர். அடிப்படைத் தேவையான மின்சாரமும், குடிநீரும் இல்லாமல் தவிக்கும் நிலையில்தான், வேறு வழியின்றி நள்ளிரவில் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டது” என வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777
