காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வாக்கிங் சென்ற 76 வயது மூதாட்டியிடம், உயர்ரக யமஹா பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் 5 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் வயது 76. இவர் வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது யமஹா உயர் ரக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் திடீரெனக் கண்ணம்மாளை வழிமறித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், கண்ணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

​திடீரென நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த மூதாட்டி கண்ணம்மாள், நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க அவர்களை நோக்கிச் சற்று தூரம் துரத்திச் சென்று கூச்சலிட்டுள்ளார். ஆனால், பதற்றத்திலும் பயத்திலும் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆறுதல் அளித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப்பகலில், பரபரப்பாகக் காணப்படும் வீதியில் நடந்த இந்த துணிச்சலான வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவகாஞ்சி காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வெள்ளை கலர் உயர்ரக யமஹா பைக் இந்தப் பகுதியில் 2 நாட்களாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த நகையை கண்ட ஹெல்மெட் அணிந்த மர்ம வாலிபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அவருடைய கழுத்திலிருநது நகையைப் பறித்துக் கொண்டு தப்பினர்.

நல்வாய்ப்பாக அந்த மூதாட்டிக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை , அதிக மக்கள் நடமாட்டம் உள்ள எங்கள் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது என தெரிவித்தனர்.

செய்திகள் : லட்சுமி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed