காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் காரப்பேட்டை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர் மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநர் மருத்துவர் லோகேஸ்வரி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய கட்டடங்களின் நிலையை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர் கூறியதாவது,


“மருத்துவமனையின் ஒவ்வொரு தளத்திலும் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சேவைகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காய்ச்சல், குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகளில் போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் உள்ளன. நோயாளிகளுக்கு எவ்வித தடையுமின்றி சிகிச்சை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இருதய சிகிச்சை பிரிவு கைவிடப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட பே வார்டு இரண்டு ஆண்டுகளாகவே மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் காத்திருப்போர் அறை 90 படுக்கைகள் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளலாம் போன்ற கேள்விகளுக்கு ஆய்வு செய்யவில்லை, அதைப்பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என மழுப்புலான பதில் கூறினார். மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, திமுக ஆட்சியில் பணி நிறைவு பெற்ற 5 அடுக்கு புதிய கட்டடத்திற்கான உரிமங்கள் (Licence) பெறுவது குறித்த கேள்விக்கு , உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மத்திய அரசிடமிருந்து விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்றும், ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையைத் தன்னாட்சி (Autonomous) நிறுவனமாக மாற்றுவது குறித்தும், கட்டட அறைகளின் முன்பு ‘Pay Ward’ எனப் பொறிக்கப்பட்டுள்ளதைப் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது தமிழக அரசின் கொள்கை முடிவு என இயக்குநர் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில், இம்மாற்றத்தால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாத ஏழை எளிய நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 60 சதவீதம் மக்கள் மட்டுமே காப்பீட்டு அட்டை வைத்துள்ள நிலையில், இந்த தன்னாட்சி நடவடிக்கை மக்களுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும், ஏழை நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும் என்றும் நோயாளிகள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தலைப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
