நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் இன்று நாகூர் தர்காவிற்கு வருகை புரிந்தார். அவருக்கு நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா வரும் நவம்பர் 10 ம் தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தர்கா நிர்வாகிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். மேலும், கந்தூரி விழாவிற்காக இந்த ஆண்டு 50 கிலோ சந்தனக் கட்டைகள் தேவைப்படுவதாகவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாகூர் தர்கா மார்க்கெட் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது என்பதையும், அதன் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும் தர்கா நிர்வாகம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் ஷாஜகான் அவர்கள், இதுதொடர்பாக இந்த மாதத்திலேயே மீண்டும் நாகூருக்கு வருகை புரிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அமைச்சரின் நாகூர் தர்கா வருகைக்கு முன்னதாக, நாகூர் ஆண்டவரை தரிசித்து, மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

இந்த சந்திப்பின்போது நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜிமுதீன் சாஹிப், பரம்பரை அறங்காவலரும் ஆலோசனைக் குழுத் தலைவருமான சையது முகமது கலிபா சாஹிப், பரம்பரை அறங்காவலர் சுல்தான் கலிபா சாஹிப் மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்திகள் : மணிவண்ணன் எதிரொலி / 8939476777
